டிக்கோயா இரட்டைக் கொலைச் சந்தேகநபர் தப்பியோட்டம்
ஹட்டன் - டிக்கோயா வயோதிப தம்பதியினர் கொலை சந்தேகநபர் இன்று (27) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை
டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பில் கடந்த வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், பொகவந்தலாவை - வீடு ஒன்றில் மறைந்திருந்தபோது, பொதுமக்களின் உதவியுடன் கடந்த சனிக்கிழமை (23) கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் இன்று (27) அதிகாலை தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்யப் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதால், அவரை மீண்டும் கைது செய்வதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.