கனடாவை உலுக்கிய கோடீஸ்வர தம்பதியின் கொலையாளி இவரா? புகைப்படம் வெளியிட்ட பொலிஸ்
கனடாவின் ரொறன்ரோ கோடீஸ்வர தம்பதியை கொலை செய்த வழக்கில் தேடப்படும் சந்தேக நபரின் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், சம்பவம் நடந்த 2017 டிசம்பர் மாதம் குறித்த தம்பதியின் குடியிருப்பின் அருகாமையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் அடையாளம் தெரியாத நபரின் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், குறித்த கமெராவில் பதிவாகியிருந்த பல மணி நேர காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. அந்த காணொளி பதிவுகளில் ஒருவர் மட்டும் தனித்து காணப்பட்டதாகவும், எஞ்சியவர்கள் பொலிசாரால் அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்பகுதியில் அந்த மர்ம நபரின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் தங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை எனவும், அந்த மர்ம நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை மட்டுமே ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது எனவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கொலை நடந்த டிசம்பர் 13ம் திகதி மதியத்திற்கு மேல் அல்லது இரவு குறித்த காட்சிகள் பதிவாகியிருக்கலாம். உடற்கூராய்வு முடிவுகளில், குறித்த கோடீஸ்வர தம்பதி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரொறன்ரோ கோடீஸ்வர தம்பதி பாரி (Barry, 75) மற்றும் ஹனி ஷெர்மன் (Honey, 70) ஆகியவர்கள் நார்த் யார்க்கில் அமைந்துள்ள தங்களின் குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் இது ஒரு தற்கொலை- கொலையாக இருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் கருதினர்.
ஆனால் அதன் பின்னர், இது இரட்டைக் கொலை என பொலிசார் முடிவுக்கு வந்தனர்.
இந்த வழக்கில் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்ட பொலிசார், குறித்த மர்ம நபர் தொடர்பில் பொதுமக்களின் உதவியை நாடுவதாக கூறியுள்ளனர்.