உக்ரைன் விவகாரத்தில் இறுதி நேரம் முடிவை மாற்றிய சுவிஸ் அரசு
உக்ரைன் நாட்டு சிவிலியன்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை என்ற முடிவினை இறுதி நேரத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் மாற்றிக் கொண்டுள்ளது.
போரில் காயமடைந்த உக்ரைன் படை வீரர்கள் மற்றும் சிவிலியன்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சுவிஸ் அரசாங்கம் நிராகரித்திருந்தது.
நடுநிலை வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றி வருவதனால் போரில் காயமடைந்தவர்களுக்கு தமது நாட்டில் சிகிச்சை வழங்குவது சாத்தியமில்லை என சுவிட்சர்லாந்து அறிவித்தது.
நேட்டோ அமைப்பினால் இவ்வாறு போரில் காயமடைந்த உக்ரைனியர்களுக்கு உதவுமாறு அதிகாரபூர்வமாக கோரப்பட்டிருந்தது.
இவ்வாறு சிகிச்சை அளித்தால், சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நடுநிலை நாடு என்ற அந்தஸ்தினை இழக்க நேரிடும் என முன்னதாக கூறியிருந்தது.
ஆரம்பத்தில் சிக்கிச்சை அளிப்பதனை நிராகரித்திருந்த அரசாங்கம் இறுதி நேரத்தில், போரில் காயமடைந்த 155 உக்ரைன் சிறார்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இணங்கியுள்ளது.
எவ்வாறெனினும், போரில் காயமடையும் உக்ரைன் படையினருக்கு எந்த வகையிலும் சுவிட்சர்லாந்தில் சிகிச்சை அளிக்கப்படாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்திற்கான உக்ரைன் தூதுவர் ஆர்டெம் ரைபசென்கோ சிவிலியன்களுக்கு சிகிச்சை வழங்க இணங்குமாறு சுவிஸ் அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இந்த கோரிக்கையை இறுதி நேரத்தில் ஏற்றுக்கொண்ட அரசாங்கம் தற்பொழுது போரில் காயமடைந்த சிவிலியன்களுக்கு சிகிச்சை வழங்க உள்ளது.