கனடா மீதான வரிவிதிப்பால் அமெரிக்காவில் வீடுகள் விலை உயரும்: ட்ரம்புக்கு ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை
கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பதாக கூறியுள்ள விடயம் இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜோ பைடன் சார்ந்த ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
அவர்கள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், அமெரிக்கா, கட்டுமானப்பணிகளுக்குத் தேவையான பல பில்லியன் டொலர்கள் மதிப்புடைய மரக்கட்டை மற்றும் சிமெண்ட் முதலான பல முக்கிய பொருட்களை கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் சுமார் 6 மில்லியன் அளவுக்கு வீடுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது, கட்டுமானப்பணிக்கான செலவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது, அத்தியாவசிய பொருட்கள் தொடர்ச்சியாக கிடைப்பதில் பிரச்சினை காணப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் இப்படி வரி விதித்தால், அது அமெரிக்காவில் வீடுகள் கட்டப்படுவதைத்தான் பாதிக்கும்.
ட்ரம்ப் கூறுவதுபோல கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டால், சீனாவையும் சேர்த்து, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கட்டுமானப் பொருட்களின் விலை சுமார் 4 பில்லியன் டொலர்கள் வரை உயரும்.
அது நுகர்வோர் தலையில் இறங்க, வீடுகள் விலை அதிகரிக்கும், புதிதாக வீடுகள் கட்டுவது குறையும், ஆக, அமெரிக்கக் குடும்பங்கள் மீது கூடுதல் சுமையாக அது அமையும் என எச்சரித்துள்ளார்கள் ஜனநாயக கட்சியினர்.