பிரித்தானியாவில் வரி உயர்வு; இடம்பெயரும் செல்வந்தர்கள் ?
பிரித்தானியாவில் வரி உயர்வு தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் பிரித்தானிய செல்வந்தர்கள் வேறு நாடுகளுக்கு குடிபயரும் மனநிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா பணவீக்கத்தின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் அறிக்கையொன்றை வெளியிட்டதை தொடர்ந்து அங்கு வரி உயர்வை அதிகரிக்க அரசாஙகம் பரிசீலனை செய்வதாக கூறப்படுகின்றது.
இடம்பெயரும் செல்வந்தர்கள் ?
இதற்கமைய சேன்சலர் (Chancellor) ரேச்சல் ரீவ்ஸ் ( Rachel Reeves) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் செல்வந்தர்களுக்கான வரி உயர்வை அதிகரிக்க பரிசீலனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரெக்ஸிட்டின் (Brexit)நீடித்த விளைவுகள் மற்றும் இங்கிலாந்து உற்பத்தித்திறனை மிகைப்படுத்தியதன் காரணமாக 50 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வரவு செலவு திட்டத்தில் செலவு குறைப்புகளை மேற்கொள்வதோடு, வரி உயர்வை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் VAT, வருமான வரி அல்லது தேசிய காப்பீட்டு கொடுப்பனவுகளை அதிகரிக்காமல் இருக்க தொழிற்கட்சி உறுதிபூண்டுள்ளது.
இதேவேளை செல்வந்தர்களுக்கான வரி உயர்வால் அவர்கள் வேறு நாடுகளுக்கு குடிபெயரலாம் என்றும், அவ்வாறு அவர்கள் செல்லும் பட்சத்தில் பிரித்தானிய தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்படும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.