கையெழுத்திடாவிட்டால்.... சீனாவை எசரிக்கும் டிரம்ப்!
அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடாவிட்டால், அந்த நாடு மீது 155 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். இதன்போது டிரம்ப் கூறுகையில்,
சீனாவுடன் அமெரிக்கா மிகவும் மரியாதையுடன் நடந்து வருகிறது. அதேசமயம், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எனது நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது.
155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்
சீனா ஏற்கனவே 55 சதவீத வரிகளைச் செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்டார்.
மேலும், "சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், நவம்பர் முதலாம் திகதி முதல் சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று திட்டவட்டமாக எச்சரித்தார்.
அத்துடன், அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு புதிய ஏற்றுமதித் தடைகளையும் விதிக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார். மலேசியாவில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள நிலையில், சீனா பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் பல நாடுகள் அமெரிக்காவைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன, ஆனால் அந்தச் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் சாதகமாகப் பயன்படுத்த முடியாது," என்றும் டிரம்ப் கூறினார்.
முக்கியமான கனிமங்களை வாங்குவது தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், சீனாவுக்கு இந்த கடுமையான எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார்.
அண்மையில், அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ்களை சீனா வாங்கவில்லை என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.