கனடிய இளம் தலைமுறையினர் குறித்து வெளியான எச்சரிக்கை
கனடாவில் ஐந்து இளைஞர்களில் நான்கு பேர் பரிந்துரைக்கப்பட்ட அளவு உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களும் திரை நேரமும் (screen time) இளைஞர்களின் உடற்பயிற்சியை மேலும் தகர்க்கும் நிலைக்கு செல்லும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
2022 முதல் 2024 வரையிலான தரவின்படி, 12 முதல் 17 வயதுக்குள் உள்ள இளைஞர்களில் வெறும் 21 சதவீதமானவர்கள் உடற்பயிற்சி பரிந்துரைகளை பின்பற்றியுள்ளனர்.
இதே வயது பிரிவில் 2018-2019 காலத்தில் 36 சதவீதம் பேர் சுறுசுறுப்பாக இருந்தனர். அதாவது, இளம்வயது குழுவே மிகக் கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
“அதிகம் உடற்பயிற்சி செய்யும் குழந்தைகள் உடல் ஆரோக்கியம், மனநலம், எலும்பு வலிமை, கல்விச் சாதனை என எந்த துறையிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள்,” என பிரின்ஸ் எட்வர்ட் தீவுப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிராவிஸ் சாண்டர்ஸ் கூறியுள்ளார்.
5 முதல் 17 வயது குழந்தைகள் தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது மூன்று நாட்கள் தீவிரமான மற்றும் தசை வலிமை அதிகரிக்கும் பயிற்சிகள் சேர்க்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முன்பள்ளி குழந்தைகளில் 90% பேர் தேவையான அளவு இயக்கத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் 5 முதல் 11 வயது குழுவில் இது 50% ஆக குறைகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.