அமெரிக்காவிலுள்ள சர்ச்சில் நடந்த பயங்கர அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் உள்ள சர்ச் ஒன்றில் வைத்து 3 மகள்களை சுட்டுக்கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், சாக்ராமென்டோவில் உள்ள சர்ச்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு நேற்று மாலை 5 மணியளவில், துப்பாக்கிச் சூடு நடந்த சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து சர்ச் பணியாளர்கள் அங்கு வந்து பார்த்தபோது, 5 பேர் சடலமாக கிடந்தனர். இதையடுத்து அவசர அழைப்பான 911-க்கு போன் செய்து, பணியாளர் போலீசாரை வரவழைத்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடந்தது என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 39 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்றும், அவர் தனது 3 மகள்கள் மற்றும் இன்னொருவரையும் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொலை செய்தவர் குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. உயிரிழந்த பெண் குழந்தைகள் வயது 9, 10 மற்றும் 13 வயது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 பெண் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கலிபோர்னியா மாகாண கவர்னர் கேவின் நியூசம், 'துப்பாக்கியால் இன்னொரு முட்டாள்தனமான வன்முறை அமெரிக்காவில் நடந்துள்ளது. அதுவும் தேவாலயத்திற்குள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த முட்டாள்தனமான செயல் கண்டிக்கத்தக்கது' என்று கூறியுள்ளார்.