அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் ஹைட்டி பிரஜைகள்
அமெரிக்காவில் வசிக்கும் ஹைட்டி குடியிருப்பாளர்களிடமிருந்து தினமும் அச்சமடைந்த தொலைபேசி அழைப்புகள் வருவதாக, மான்ட்ரியலில் செயல்படும் குடியேற்ற ஆதரவு அமைப்பின் தலைவர் ஃப்ரான்ட்ஸ் ஆண்ட்ரே தெரிவித்துள்ளார்.
கனடாவுக்குள் வடக்கு எல்லையை கடந்துவரும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முடியுமா என பலர் ஆலோசனை கேட்கின்றனர் என அவர் கூறினார்.
அமெரிக்காவில் ஹைட்டி குடியிருப்பாளர்களுக்கான தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து (Temporary Protected Status – TPS) திட்டம் அடுத்த மாதம் முடிவடைய உள்ள நிலையில், சட்டவிரோத எல்லைத் தாண்டல்கள் அதிகரிக்கும் என ஆண்ட்ரே எச்சரித்துள்ளார்.

ஹைட்டி வம்சாவளி
தாம் பேசிக் கொண்டிருக்கும் இந்நேரத்திலேயே, சிலர் கனடாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாக கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆவணமற்ற மக்களுக்கான செயல் குழுவை (Action Committee for People Without Status) சேர்ந்த ஹைட்டி வம்சாவளியுடைய கியுபெக் பிரஜையான ஆண்ட்ரே தெரிவித்தார்.
கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து இதுவரை, குவெபெக் மாகாணத்தில் குறைந்தது 27 ஹைட்டி வம்சாவளியுடைய குடியேறிகள், எல்லை பாதுகாப்புப் படைகளைத் தவிர்த்து கால்நடையாக எல்லை கடந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடும் குளிரில் பயணம் செய்ததால், பலர் நோய்களினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த குடியேறிகளில் சிலர் ஏற்கனவே அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையிடம் (U.S. Customs and Border Protection) ஒப்படைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கனடா எல்லை சேவை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் செய்யப்பட்ட ஒப்பந்த மாற்றங்களின் காரணமாகவே, இவ்வளவு விரைவான நாடுகடத்தல்கள் சாத்தியமாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.