நல்லடக்கம் செய்யப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸின் உடல்

Sahana
Report this article
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம் திகதி வாடிகனில் உள்ள இல்லத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் கடந்த 23 ஆம் திகதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
3 நாட்களில் சுமார் 2.5 லட்சம் பேர் போப்பின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்றையதினம் மதியம் தொடங்கி நடைபெற்றது. முதலில் பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல்கள் குழுவின் டீன் கியோவனி படிஸ்டா ரே இந்த சடங்குகளை வழிநடத்தினார்.
சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த நடைமுறை, எளிமையான முறையில் நடைபெற்றது. இதனிடையே, இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கலந்து கொண்டார்.
அத்துடன், இந்திய அதிபர் திரௌபதி முர்மு, இளவரசர் வில்லியம், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் மன்னர் ஆறாம் பெலிப், ராணி லெடிசியா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்ட உலகெங்கிலும் இருந்து தலைவர்கள் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மறைந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படியே வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.