செர்னொபெல் அணு உலைக்கு நேர்ந்த கொடுமையான நிலை; உக்ரைன் அதிர்ச்சி தகவல்
செர்னொபெல் அணு உலையில் இருந்த ஆய்வகத்தை ரஷ்யா அழித்துவிட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 28-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றி வருகின்றன.
குறிப்பாக, அந்நாட்டின் பிரிப்யாட் நகர் அருகே செர்னொபெல் என்ற இடத்தில் உள்ள அணு உலையை ரஷ்ய படைகள் கைப்பற்றின.
செர்னொபெல் அணு உலையில் கடந்த 1986 ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. மனித குல வரலாற்றில் மிகவும் கொடூரமான அணு உலை விபத்தாக அது கருதப்படுகிறது.
இதற்கிடையில், அந்த விபத்துக்கு பின் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த செர்னொபெல் அணு உலை ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் 2015-ம் ஆண்டு மீண்டும் செயல்பட்டுக்கு வந்தது.
தற்போது, அந்த அணு உலை ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அணு உலை மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
இதனால், அணு கசிவு ஏற்படலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செர்னோபெல் அணு உலையில் இருந்த ஆய்வகங்களை ரஷ்ய படைகள் அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.