சம்பளம் கேட்ட ஊழியருக்கு கிடைத்த அடி!
சிங்கப்பூரில் சம்பளப் பிரச்சினையால் ஊழியரை இரும்புக் கம்பியால் தாக்கிய கட்டுமான நிறுவனத்தின் முதலாளிக்கு 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
67 வயதான ஹோ சியாவ் காய் (Ho Seow Gai), பங்களாதேஷைச் சேர்ந்த 39 வயது மியா ரஷீட்டை (Mia Rashed) வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இச் சம்பவம் நடந்தபோது திரு. ரஷீட், ஹோ சியோவ் காயின் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். சென்ற ஆண்டு பிப்ரவரியில் தனது சம்பள பாக்கியைக் கொடுக்குமாறு திரு. ரஷீட் ஹோவிடம் கேட்டிருக்கிறார்.
அப்போது சம்பளத்தை மறுநாள் கொடுப்பதாக ஹோ கூறியிருக்கிறார். மறுநாள் இருவரும் நேரில் சந்தித்தபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஹோ சுமார் அரை கிலோகிராம் எடையுள்ள இரும்புக் கம்பியால் ரஷீட்டைத் தாக்கத் தொடங்கினார்.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன் ஹோ அங்கிருந்து சென்றுவிட்டார். 2,000 வெள்ளிக்கும் மேல் வந்த ரஷீட்டின் மருத்துவக் கட்டணத்தை ஹோ செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஹோவின் தண்டனைக் காலம் வரும் செவ்வாய்க்கிழமை (23 ஆகஸ்ட்) தொடங்கும்.
வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றத்திற்கு 3 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையோ 5,000 வெள்ளி வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.