வீட்டுக்குள் அன்னிய நபர் நுழைந்ததாக கருதி மகளை சுட்டுக்கொன்ற தந்தை!
அமெரிக்காவில், வீட்டுக்குள் அன்னிய நபர் யாரோ புகுந்ததாக கருதி தனது மகளையே தந்தை ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஒஹியோ மாகாணத்தின் கொலம்பஸ் புறநகர்ப் பகுதியில், ஜேன் ஹேர்ஸ்டன் என்ற 16 வயது பள்ளி மாணவி, இவ்வாறு தவறுதலாக தந்தையால் சுடப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தங்கள் மகள் வீட்டின் கார் ஷெட்டில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அவரது தாயார் அதிகாலை 4.30 மணிக்கு அவசரகால சேவை பிரிவை அழைத்துள்ளார்.
இந்நிலையில் தரையில் விழுந்த கிடந்த ஜேன் ஹேர்ஸ்டனை எழுந்துகொள்ளுமாறு, அவரது பெற்றோர் கதறிக் கொண்டிருந்த நிலையில், விரைந்து வந்த அவசர கால பிரிவினர் மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
எனினும் மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேவேளை அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு உயிரிழப்போர் எண்ணிக்கை, குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் நடப்பாண்டான 2021-ம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் சுமார் 44 ஆயிரம் பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.