தற்கொலைக்கு முயன்ற இளைஞனை 15 நிமிடத்தில் காப்பாற்றிய பொலிஸார்!
இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத், கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் ரூ.90,000 (இந்திய ரூபா மதிப்பில்) நஷ்டமடைந்திருக்கிறார்.
இதையடுத்து, தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், தன் இயலாமையை பேஸ்புக் லைவ்வில் தெரிவித்துவிட்டு, தற்கொலை செய்துக்கொள்வதையும் நேரலையில் ஒளிபரப்ப முயன்றிருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மெட்டா மற்றும் உத்தரப்பிரதேச பொலிஸார் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம், குறித்த நபர் தற்கொலை செய்துக்கொள்ள முயல்வது தொடர்பான தகவலை, உடனடியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள டிஜிபி அலுவலகத்தின் ஊடக மையத்துக்கு, மின்னஞ்சல் மூலம் தெரிவித்து எச்சரித்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு 15 நிமிடத்துக்குள் சென்ற பொலிஸார் குறித்த நபரின் உயிரைக் காப்பாற்றினர்.
இது தொடர்பாக பேசிய பொலிஸ் அதிகாரி,”எங்களுக்கு மெட்டா நிறுவனத்திடமிருந்து மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து குறித்த நபரை காப்பாற்ற முடிவு செய்தோம். அவரின் வீட்டை கண்டுபிடிக்க மட்டுமே சற்று தாமதமானது” என பொலிஸ் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.