கனடா விவசாய நிலங்களில் செப்பு கம்பித் திருட்டு – 10,000 டாலர் வெகுமதி
கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் செப்பு கம்பித் திருட்டுகளால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக, பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் பாசனக் கருவிகளில் இருந்து செப்பு கம்பிகள் திருடப்படுவதால் லட்சக்கணக்கான ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
வின்னிபெக் நகருக்கு மேற்கே அமைந்துள்ள போர்டேஜ் லா ப்ரைரி பகுதியில் விவசாயம் செய்து வரும் ரேச்சல் ப்ரோடன் என்பவரது குடும்பப் பண்ணை இந்தத் திருட்டுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அவரது பண்ணையில் உள்ள ‘வீல்ட் இரிகேஷன் சிஸ்டம்’ எனப்படும் ராட்சத நீர் பாய்ச்சும் கருவிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மீட்டர் நீளமுள்ள செப்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளன.
"இந்தக் கருவிகளை மீண்டும் செயல்பட வைக்க சுமார் 20,000 டொலர் செலவாகும் என நினைக்கிறோம். இது ஒன்றும் மலிவானதல்ல," என ரேச்சல் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
செப்பு கம்பிக்காகத் திருடர்கள் மேற்கொண்ட சிதைவு வேலைகளால், சோளம் நடும் கருவி ஒன்று முழுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால் அதனைப் பழுதுபார்க்க முடியாமல், 50,000 டொலர் செலவில் புதிய கருவியை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார ரீதியாக நெருக்கடியான இந்த ஆண்டில், உர விலை மற்றும் விதை விலை உச்சத்தில் இருக்கும்போது, எதிர்பாராத இந்தச் செலவுகள் விவசாயிகளை நிலைகுலையச் செய்துள்ளன.
இதன் விளைவாக, திட்டமிட்டபடி 1,500 ஏக்கரில் சோளம் பயிரிட முடியாமல், சாகுபடி பரப்பை 1,000 ஏக்கராக அவர்கள் குறைத்துள்ளனர்.
புள்ளிவிவரங்களின்படி, கனடாவின் பிரெய்ரி மாகாணங்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், கிராமப்புற மேனிடோபா குற்ற விகிதத்தில் நாட்டில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.