லாட்டரியில் பரிசு வென்ற 98 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட சிக்கல்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த 98 வயதான ஜெஸ்சி பரோஸ் என்ற மூதாட்டி, ஸ்கிராட்ச்-அண்ட்-வின் லாட்டரி சீட்டில் 1,000 டொலர் வென்ற மகிழ்ச்சியில் இருந்தபோதிலும், அடையாள ஆவணப் பிரச்சினை காரணமாக தனது பரிசுத் தொகையைப் பெற ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
லண்டன், ஒன்டாரியோவைச் சேர்ந்த அவரது மகன் பிரையன் பரோஸ் தெரிவித்ததாவது, தனது தாயார் ஏப்ரல் மாத தொடக்கத்தில் 1,000 டொலர் பரிசை வென்றிருந்தார்.
ஆனால் பரிசுத் தொகையைப் பெறச் சென்றபோது, செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாத காரணத்தால் பணத்தை வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி தனது கிரெடிட் கார்டு கடனைச் செலுத்த நினைத்தார்.
ஆனால் பரிசுத் தொகையைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது என்று பிரையன் கூறினார். பொதுவாக 999 டொலர் அல்லது அதற்குக் குறைவான லாட்டரி பரிசுகளை விற்பனையாளர்கள் நேரடியாக வழங்க முடியும்.
ஆனால் 1,000 டொலர் அல்லது அதற்கு மேற்பட்ட பரிசுத் தொகைகள் ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் (OLG) பரிசு மையத்தின் மூலம் மட்டுமே வழங்கப்படுகின்றன.
அதற்காக செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு அல்லது ஒன்டாரியோ புகைப்பட அடையாள அட்டை அவசியமாகும். ஜெஸ்சி இனி வாகனம் ஓட்டுவதில்லை. மேலும் அவரது கடவுச்சீட்டும் காலாவதியாகியிருந்தது.
என்னுடைய தாயாரின் கனடிய குடியுரிமை அட்டையும் காலாவதியான கடவுச்சீட்டும் இருந்தன.
ஆனால் அவை போதுமானதாக ஏற்கப்படவில்லை என பிரையன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகிய பின்னர், OLG நிறுவனம் விளக்கமளித்தது. ஜெஸ்சி பரோஸ்தான் வெற்றிச் சீட்டின் உரிமையாளர் என உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அவருக்கு 1,000 டொலர் பரிசுத் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது.
மேலும், அவரது வயது மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டொராண்டோவிற்கு பயணம் செய்ய வேண்டிய அவசியமின்றி, OLG விசாரணை அதிகாரிகள் அவரது வீட்டிற்கே சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி பரிசு கோரிக்கை செயல்முறையை நிறைவு செய்தனர்.