கனடாவின் சந்தைகளிலிருந்து மீளப்பெறப்படும் உணவுப் பொருள்
கனடாவில் விற்பனையாகும் பிரபல 'So Delicious Dairy Free' பிராண்டின் உறைவிக்கப்பட்ட இனிப்புப் பொருட்களில் பிளாஸ்டிக் மற்றும் சிறிய கூழாங்கற்கள் போன்ற கடினமான துகள்கள் கலந்துள்ளதால், அவற்றை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக கனடா உணவு ஆய்வு முகமை அறிவித்துள்ளது.
'So Delicious Dairy Free salted caramel' (முந்திரி பருப்பு அடிப்படையிலான ) 500 மி.லி பாக்கெட்டுகள் இந்தத் திரும்பப்பெறல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கீழ்கண்ட 'பயன்படுத்த வேண்டிய கடைசி திகதி கொண்ட தயாரிப்புகள் இதில் அடங்கும்:

• 2027: செப்டம்பர் 8, அக்டோபர் 15 மற்றும் 16
• 2028: பிப்ரவரி 3 மற்றும் 25, மார்ச் 30 மற்றும் 31
பாதிக்கப்பட்ட இந்தத் தயாரிப்புகளை நுகர்வோர்கள் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, உணவுக்காகப் பரிமாறவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என்று கனடா உணவு ஆய்வு முகவர் நிறுவனம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் 'டானோன்' நிறுவனம் செப்டம்பர் 15ம் திகதி அமெரிக்காவிலும் இதற்கான திரும்பப்பெறல் அறிவிப்பை வெளியிட்டது.
அமெரிக்க அறிவிப்பின்படி, 2028 ஏப்ரல் 3 அல்லது அதற்கு முந்தைய திகதிகளை 'Best-by' ஆகக் கொண்ட அனைத்து பாக்கெட்டுகளிலும், முந்திரிப் பருப்புகளுடன் சிறிய கற்கள் மற்றும் பிற கடினமான பொருட்கள் கலந்துள்ளமை கண்டறியப்பட்டது.
நுகர்வோரிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்தச் சிக்கல் கண்டறியப்பட்டு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், கடைகளில் உள்ள பிற பாதுகாப்பான தயாரிப்புகளும், இனி புதிதாக விற்பனைக்கு வரவிருக்கும் தயாரிப்புகளும் இதனால் பாதிக்கப்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.