ரஷியாவுடனான பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே இதுதான் !
ரஷிய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷிய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்பு, விருப்பம், ஆசை.
ஆனால் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு, சமரச பேச்சுவார்த்தைக்குத்தான் உண்டு.
போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷியா இணங்கி வந்துள்ளது.
இதன்படி பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருந்து வருகிற அழுத்தங்களும் ரஷியாவை இறங்கி வரச்செய்துள்ளது.
பேச்சுவார்த்தைக்காக பெலாரஸ் நாட்டில் உள்ள ஹோமெல் நகருக்கு ரஷிய தூதுக்குழு வந்து சேர்ந்து விட்டதாகவும் ரஷிய அதிபர் மாளிகை சொல்கிறது. அவர்கள் உக்ரைன் தூதுக்குழுவின் வருகைக்காக காத்திருப்பதாகவும் ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ் உறுதி செய்திருந்தார்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தையின் நோக்கம் என்ன என்பது குறித்து உக்ரைன் அதிபர் அலுவலகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
அதில், ரஷியா உடனடியாக போரை நிறுத்த வேண்டும். உக்ரைனில் இருந்து ரஷிய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.