இவர் மீது கை வைத்தால் உலகத்தையே கொளுத்துவோம் ; அமெரிக்கா ஜனாதிபதிக்கு சென்ற மிரட்டல்
ட்ரம்ப், எங்கள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மீது நடவடிக்கை எடுத்தால், அந்தக் கையை வெட்டி எறிவது மட்டுமின்றி, அவர்களின் உலகத்தையே தீக்கிரையாக்குவோம், என, அந்நாட்டு ஆயுதப்படை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த மாதம் முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னர் அது, அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டமாக மாறியது. போராட்டங்களை ஒடுக்க ஈரான் அரசு நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறைகளில், 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'நாட்டை சரியாக நடத்த வேண்டும்; மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும்.
ஈரானுக்கு புதிய தலைமையை தேடும் நேரம் வந்துவிட்டது. 'கமேனியின் 40 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என்று கூறியிருந்தார். ட்ரம்பின் இந்த பேச்சுக்கு, ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அபோல்பாஸ் ஷெகர்சி, கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
''அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எங்கள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மீது நடவடிக்கை எடுத்தால், அந்தக் கையை வெட்டி எறிவது மட்டுமின்றி, அவர்களின் உலகத்தையே தீக்கிரையாக்குவோம்,'' என்று கூறினார்.
ஈரான் என்னை படுகொலை செய்ய முயன்றால், ஈரானை முற்றிலும் அழித்துவிடுவோம் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஏதேனும் நடந்தால், ஈரான் வெடித்து சிதறிவிடும்; அவர்களை பூமியில் இருந்தே அழித்து விடுவோம்,” என, டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் இதுபோன்ற அச்சுறுத்தலை வேறு யாருக்கேனும் கொடுத்தாலும், தானும் அதேபோல் பதிலடி கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.