இன்று உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்
உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 10 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. நீதியின் அர்த்தம், மனித கண்ணியத்தின் மதிப்பு மற்றும் தண்டனை வழங்கும் முறைகள் குறித்து உலக சமூகம் கொண்டுள்ள பார்வையை மறுபரிசீலனை செய்வதற்காக இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பெரும்பாலான நாடுகள் மரண தண்டனையை முழுமையாக ஒழித்துள்ளன அல்லது அதனை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளன (Moratorium) என ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

21 ஆம் நூற்றாண்டிற்கு முற்றிலும் பொருத்தமற்ற முறை
மரண தண்டனையானது குற்றங்களைக் குறைப்பதற்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதியைப் பெற்றுத் தருவதற்கோ எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஐ.நா, இது 21 ஆம் நூற்றாண்டிற்கு முற்றிலும் பொருத்தமற்ற முறை என்பதால் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
சட்டப்பூர்வமாக மரண தண்டனை நடைமுறையில் இருந்தபோதிலும், லாவோஸ் குடியரசு போன்ற நாடுகள் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எந்தவொரு மரண தண்டனையையும் நிறைவேற்றவில்லை.
அத்துடன், லெபனான் (ஆகஸ்ட் 2026), ஜிம்பாப்வே (2024) மற்றும் கானா (2023) ஆகிய நாடுகள் மரண தண்டனையை முழுமையாக ஒழித்துள்ளமை குறிப்பிடத்தக்க உலகளாவிய போக்காகும்.
மரண தண்டனையைத் தவிர்ப்பதன் மூலம் நீதித் துறையின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை வலுப்படுவதோடு, சரி செய்ய முடியாத தவறான தீர்ப்புகள் வழங்கப்படுவதற்கான அபாயமும் குறைகிறது என ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.