அமெரிக்காவின் முன்னணி நாளிதழின் பிரதம நிறைவேற்று அதிகாரி இராஜிநாமா
அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வொஷிங்டன் போஸ்ட் பணியாளர்கள் பெருமளவானோரின் பணிநீக்கங்களுக்கு பிறகு அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி வில் லூயிஸும் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல நாளிதழான வொஷிங்டன் போஸ்ட்டில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தமது பத்திரிகையின் விளையாட்டுப் பகுதி, புத்தக விமர்சனப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் மூன்றில் ஒரு பங்கினரை (300க்கும் மேற்பட்ட பணியாளர்கள்) கடந்த புதன்கிழமை திடீரென பணிநீக்கம் செய்தது.

மேலும், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பல இடங்களில் அமைந்துள்ள தனது பிராந்திய கிளைகளையும் மூடியது.
இந்தச் சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வொஷிங்டன் போஸ்ட் பிரதம நிறைவேற்று அதிகாரி வில் லூயிஸும் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அதேநேரம், பத்திரிகையின் எதிர்காலத்தை உறுதி செய்ய கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமையன்று வொஷிங்டன் டிசியில் உள்ள பத்திரிகை தலைமையகத்தின் முன் நூற்றுக்கணக்கான ஊடகர்களும் பத்திரிகையின் பிராந்திய மற்றும் மத்திய கிழக்கு ஊழியர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.