14 வயது சிறுமியை விமான நிலையத்தில் தவிக்க விட்ட ஏர் கனடா: கொந்தளிக்கும் தாயார்
ரொறன்ரோவில் இருந்து தனியாக பயணப்பட்ட 14 வயது சிறுமி, விமானம் ரத்து செய்யப்பட்டதால் உதவியின்றி தனித்து விடப்பட்ட சம்பவம் அவரது தாயாரை கொந்தளிக்க வைத்துள்ளது.
கனடாவின் மிகப்பெரிய விமான நிலையமான பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஜனவரி 18ம் திகதி Diomerys O'Leary என்பவரின் மகள் ஈவா, டொமினிக்கன் குடியரசு நாட்டில் தமது தந்தையை சந்தித்துவிட்டு ரொறன்ரோ வழியாக St. John's-கு திரும்பியுள்ளார்.
ஆனால் ரொறன்ரோ விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல் Diomerys O'Leary என்பவரை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே, மகளை தனியாக அனுப்பி வைப்பதில் மிகுந்த கலக்கத்திலும் இருந்துள்ளார் Diomerys O'Leary.
இந்த நிலையில் தான் தமது மகளிடம் இருந்து அந்த தகவல் அவருக்கு வந்துள்ளது. ஊழியர்கள் தட்டுப்பாட்டால் விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் பயணிக்கலாம் எனவும் நிர்வாகத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தூக்கத்திற்கும் உணவுக்கும் போக்குவரத்திற்கும் தாமே முடிவு செய்து கொள்ளவும் அந்த சிறுமியிடம் ஏர் கனடா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலக்கமடைந்த அந்த சிறுமி விமான நிலையத்தில் இருந்து தமது தாயாரிடம் உதவி கேட்டுள்ளார்.
மட்டுமின்றி, தமது மகள் அழுகையுடன் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளதுடன், இப்படியான ஒரு சூழலில் சிக்குவோம் என நம்ப முடியவில்லை என ஈவா குறிப்பிட்டுள்ளதாகவும் Diomerys O'Leary தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தங்களால் பொறுப்பேற்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான விதிகளை ஏர் கனடா பின்பற்றுவதாகவும் தெரிய வந்துள்ளது. பல மைல்கள் தொலைவில் தனியாக சிக்கிக்கொண்ட தமது மகளுக்காக பல மணி நேரம் தொலைபேசியிலும் இணையத்திலும் போராடியுள்ளார் Diomerys O'Leary.
விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஹொட்டல்கள், சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. மட்டுமின்றி, உணவுக்காக செலவிட அப்போது அவரிடம் பணம் ஏதும் கைவசம் இல்லாமல் போயுள்ளது.
இறுதியில் தமது மகள் அந்த இரவு தங்கிக்கொள்ள Airbnb ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன், உணவுக்கும் வழி செய்துள்ளார். தமது வாழ்க்கையில் மறக்க முடியாத இரவு அது என தெரிவித்துள்ளார் Diomerys O'Leary.
மட்டுமின்றி, தமது மகளை பத்திரமாக அந்த இரவு தங்க வைத்தாலும், அதன் பின்னர் அந்த இரவு முழுவதும் தம்மால் தூங்க முடியாமல் போயுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அடுத்த நாள் தமது மகள் வீடு திரும்புவதற்காக St. John's-கு பேருந்து பயணத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் அவர்.