டொராண்டோ மாநகராட்சியில் வெளிநாட்டு கொடிகளை ஏற்ற தடை
டொராண்டோ மாநகராட்சி மற்றும் அதன் கிளை அலுவலகங்களில் இனி வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மாநகரசபைக் கூட்டத்தில், "ஒரே நாடு, ஒரே கொடி; கனடியக் கொடியைக் கொண்டாடுவோம்" (One Country, One Flag; Celebrating the Canadian Flag) என்ற பெயரில் முன்மொழியப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் திகதி முதல் மாநகராட்சி வளாகங்களில் உள்ள சிறப்புக்கொடி கம்பங்களில் (Courtesy flagpoles) பிற நாடுகளின் கொடிகளைப் பறக்கவிடும் வழக்கம் முடிவுக்கு வருகிறது.

நகராட்சி உறுப்பினர் ஜான் பர்ன்சைடு (Jon Burnside) இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். கொடி என்பது மக்களை ஒன்றிணைக்கும் அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர, பிரிவினையைத் தூண்டும் மையப்புள்ளியாக இருக்கக் கூடாது என்று அவர் வாதிட்டார்.
குறிப்பாக, சில நாடுகளின் கொடி ஏற்றும் நிகழ்வுகளின் போது ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கக் காவல்துறையினர் குவிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மாநகராட்சி வளாகம் இத்தகைய அரசியல் விவாதங்களுக்கான இடமல்ல என்று குறிப்பிட்டார்.
இறுதியில் 19-7 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் ஒலிவியா சௌ உள்ளிட்ட பல உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதேசமயம், மாமன்ற உறுப்பினர்கள் லில்லி செங், நிக் மாண்டஸ் மற்றும் ஜமால் மியர்ஸ் ஆகியோர் இந்த முடிவிற்குத் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். "உலகின் மிகச்சிறந்த பன்முகத்தன்மை கொண்ட நகரமான டொராண்டோவில், புலம்பெயர்ந்து வாழும் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த மக்களின் அடையாளத்தை இந்த முடிவு பாதிக்கும்" என்று அவர்கள் கவலை வெளியிட்டனர்.
எனினும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட கொடியேற்ற நிகழ்வுகள் மட்டும் இந்த ஆண்டு டிசம்பர் வரை அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.