பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த சிறைச்சாலை அதிகாரி
ரொறன்ரோவில் கைது ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி போல் நடித்து ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில், ரொறன்ரோ சவுத் தடுப்பு மையத்தின் சிறைச்சாலை அதிகாரி ஒருவரை ரொறன்ரோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிப்ளிங் அவென்யூ மற்றும் லேக் ஷோர் பவுல்வர்ட் வெஸ்ட் பகுதியில் உள்ள கர்னல் சாம் ஸ்மித் பூங்காவின் வாகனத் தரிப்பிடத்தில் இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான சம்பவம் குறித்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு விரைந்தனர்.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றை அணுகிய சந்தேகநபர், உலோகப் பதக்கம் ஒன்றைக் காண்பித்துத் தன்னை ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின்னர் வாகனத்தில் இருந்தவர்களிடம் அடையாள அட்டைகளைக் கோரியதுடன், வாகனத்தை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதிக்கு அருகில் வைத்து மிசிசாகாவைச் சேர்ந்த 21 வயதான ஜோஷியா ஜிஜு கோஷி என்ற சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்தனர்.
அவர் மீது அமைதி அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் பொது அதிகாரியால் நம்பிக்கை மோசடி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவர் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார். சந்தேகநபர் இதேபோன்று பொலிஸ் அதிகாரி எனக் கூறி வேறு நபர்களையும் அணுகியிருக்கலாம் எனப் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
நகரின் மேற்குப் பகுதியில் உள்ள பூங்காக்கள், வாகனத் தரிப்பிடங்கள் அல்லது ஏனைய பொது இடங்களில் இவரால் அணுகப்பட்டவர்கள் எவரேனும் இருந்தால், உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.