கனடாவில் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்குப் பின்னர் தப்பிச் சென்ற கார் மோதிப் பலத்த காயமடைந்த டொரண்டோவைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவருக்கு, டொரண்டோ மாநகராட்சி 40,000 டொலர் அபராதக் கட்டணப் பட்டியலை அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024 டிசம்பர் மாதம் ஃபேர்வியூ மால் அருகே நடந்த இந்த விபத்தில், நான்சி பக்மேன் என்ற 68 வயதான செவிலியர் பயணித்த கார் மீது, நகைக்கடை கொள்ளைக்குப் பின் தப்பி ஓடிய நபர்களின் கார் அதிவேகமாக வந்து மோதியது.
டான் மில்ஸ் ரோடில் இருந்து மஞ்சள் சிக்னலில் இடதுபுறம் திரும்ப முயன்றபோது, மிக வேகமாக வந்த கார் நான்சியின் சுபாரு காரை மோதித் தள்ளியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்ததுடன், நான்சி சுயநினைவை இழந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தினால் நான்சிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுத் தீவிர சிகிச்சை பெற வேண்டிய சூழல் உருவானது. அத்துடன், டொரண்டோ பொது மருத்துவமனையில் 40 ஆண்டுகளாக ஆற்றி வந்த செவிலியர் பணியில் இருந்தும் அவர் முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
ஜூலை மாத இறுதியில் நான்சிக்கு டொரண்டோ மாநகராட்சியிடம் இருந்து 40,350.11 டொலர் மதிப்பிலான 10 பக்கக் கட்டணப் பட்டியல் வந்தது. விபத்தின் போது உடைந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கான செலவு அது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
காவல்துறையின் அறிக்கையின்படி, இடதுபுறம் திரும்பிய நான்சி தான் தப்பிச் சென்ற காரை கவனித்து வழிய விட்டிருக்க வேண்டும் என்றும், அதனால் விபத்திற்கு அவரே பொறுப்பு என்றும் மாநகராட்சி தெரிவித்தது.
கொள்ளையடித்துத் தப்பிய நபர்கள் இதுவரை கைதாகாததால், மாநகராட்சி இந்த பெரிய தொகையை நான்சியிடம் கோரியது. "நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன். என்னால் இதை நம்பவே முடியவிலை. இந்த அமைப்பே மிகவும் விசித்திரமாக உள்ளது," என்று நான்சி வேதனையுடன் தெரிவித்தார்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, காவல்துறை அறிக்கையில் நான்சி மீது தவறு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், அவரது காப்பீட்டு நிறுவனம் அந்த 40,000 டொலர் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தியது. எனினும், இந்த விபத்தின் காரணமாக வரும் ஆண்டுகளில் நான்சியின் காப்பீட்டுக் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ மாகாண விதிமுறைகளின்படி, இடதுபுறம் திரும்பும் வாகனமே விபத்திற்குப் பொறுப்பாக்கப்படும் என்ற விதியை மாற்ற முடியாது என காப்பீட்டுத் துறை நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.