தங்க சுரங்கத்தில் சிக்கிய சுற்றுலா பயணக் குழுக்கள்... ஒருவர் உயிரிழப்பு!
மேற்கு அமெரிக்கா - கொலராடோ மாநிலத்தில் உள்ள பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தின் மின்தூக்கி செயலிழந்ததன் காரணமாக நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆபத்தான நிலையிலிருந்த 23 பேர் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலராடோ தங்கச் சுரங்கம் தற்போது தனியாருக்குச் சொந்தமான சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.
12 பேரைக் கொண்ட 2 சுற்றுலா பயணக் குழுக்கள் தங்கச் சுரங்கத்தினுள் இருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதில் ஒரு குழுவினர் 6 மணி நேரத்தின் பின்னரே மீட்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தக் குழுவில் சிறுவர்களும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மற்றொரு குழுவினர் அந்தத் தங்கச் சுரங்கத்தின் அடிப்பகுதியில் சிக்குண்டிருந்த போதிலும், பல மணித்தியாலத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.