மெக்ஸிகோ, கனடா, சீனா மீதான வரி விதிப்பை நடைமுறைப்படுத்திய அமெரிக்கா
மெக்ஸிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25% வரியை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இது அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளை கட்டுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்பட்டாலும் இந்த நடவடிக்கையானது வட அமெரிக்க பொருளாதாரத்தையே பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான வரி 10% இலிருந்து 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு சீன பொருளாதாரத்திற்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். கனடா மற்றும் மெக்ஸிகோ, அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலையும் குடியேற்றங்களையும் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் இவ்வாறு வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய வரிகள் அமெரிக்காவில் பொருட்களின் விலையை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு, மெக்ஸிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து 1.4 டிரில்லியன் டாலர் மதிப்பில் பொருட்கள் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டதுடன் இது அமெரிக்காவின் மொத்த இறக்குமதி மதிப்பில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.