நியூயார்க் சுரங்கப்பாதை ரயிலில் நேர்ந்த விபரீதம்!
அமெரிக்கா- நியூயார்க் சுரங்கப்பாதை ரயிலில் பயணிகளை அச்சுறுத்திய மர்ம நபரைப் பிடித்து அவரின் கழுத்தை சக பயணி ஒருவர் இறுக்கிப் பிடித்ததில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நியூயார்க் நகரில் கடந்த திங்கள்கிழமை சுரங்கப்பாதை ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மர்மநபர் உயிரிழப்பு
இதையடுத்து, 24 வயது இளைஞர் ஒருவர் பின்புறம் இருந்தபடி அந் நபரைப் பிடித்து, அவரின் கழுத்தை இறுக்கிப் பிடித்துள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர். சத்தமிட்டுக்கொண்டே, காலால் எட்டி உதைத்து திமிற முயன்றுள்ளார் ஆனால், அவரை விடாமல் தொடர்ந்து கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டே இருந்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த நபர் சுயநினைவை இழந்துள்ளார். இதனிடையே பயணிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் சுயநினைவின்றி இருந்தவரைப் பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் கழுத்தை இறுக்கிப் பிடித்த இளைஞரிடம் விசாரணை நடத்தி பின்னர் அவரை விடுவித்தனர்.
பொலிஸார் விசாரணை
இதுகுறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன் உயிரிழப்புக்கான காரணத்தை அறிய மருத்துவர்களின் உதவியை நாடி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது உடன் இருந்த பத்திரிகையாளர் ஜுவான் அல்பெர்ட்டோ வாஸ்க்யூஸ் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. சம்பவத்தை வீடியோ எடுத்த ஜுவான் கூறும்போது,
“ரயிலில் ஏறிய மர்ம நபர் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பேசினார். ‘நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். எனக்கு தாகமாக இருக்கிறது, எதைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை. சிறைக்கு செல்லவும் தயங்கவில்லை.
எனக்கு மரண தண்டனை விதித்தாலும் கவலை இல்லை. என் உயிரே போனாலும் கவலை இல்லை’ என அந்த நபர் கூறினார். இதனால்தான் சக பயணி ஒருவர் அவரைப் பிடித்து திமிறாமல் பிடித்துக் கொண்டார். ஆனால் அவர் உயிரிழப்பார் என யாரும் நினைக்கவில்லை” என்றார்.