சாரதியே இல்லாமல் 9 ரயில் நிலையங்களை கடந்து சென்ற ரயில்!
ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் இருந்து பஞ்சாப் மாநிலம் உச்சி பஸ்ஸி வரை சரக்கு ரயில் ஓட்டுநரின்றி இயங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் கடந்த ஞாயிறுக்கிழமை (25-02-2024) இடம்பெற்றுள்ளது.
சரக்கு ரயில் ஓடிய கடவையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டதில், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புகளை கொண்டு ரயில் நிறுத்தப்பட்டது.
சுமார் 9 ரயில் நிலையங்களை மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரயில் கடந்து சென்றது.
குறித்த ரயில் சாரதி இல்லாமல் தானாக ஓடியது எப்படி என்பது குறித்த முக்கிய தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த 5 மூத்த அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
பிடிஐ செய்தி முகமையின்படி, மூத்த அதிகாரிகள் சரக்கு ரயிலை சாரதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது சம்மந்தப்பட்ட ரயில் சாரதி கூறியது,
சரக்கு ரயிலை கத்துவா ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு ஹேண்ட் பிரேக்குடன் சேர்த்து 3 பெட்டிகளுக்கும் பிரேக் செலுத்தி முறையாக நிறுத்தியதாகவும் ரயில் மேற்கொண்டு நகராமல் இருக்க சக்கரங்களுக்கு முன்பு இரண்டு மரக்கட்டைகளை வைத்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
இருப்பினும், ரயில் தானாக புறப்பட்டுச் சென்று பஞ்சாபின் உச்சி பஸ்ஸி ரயில் நிலையத்தை அடைந்ததும் அங்குள்ள நிலைய அதிகாரி, ரயிலை ஆய்வு செய்துள்ளார்.
ஆய்வின்போது வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரயில் பெட்டிகளுக்கு முறையாக ஹேண்ட் பிரேக் போடாதது தெரிய வந்ததாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.
சம்பவத்தன்று கத்துவாவில் பணியில் இருந்த நிலைய அதிகாரி, காலை 6.05 முதல் 7.10 மணி வரை ரயிலை சரியாக வழிநடத்தவில்லை என்பதும் விசாரணயில் தெரியவந்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தானாக ஓடிய சரக்கு ரயில், ரயில்வே கட்டுமான பணிகளுகான பொருட்களை ஏற்றிச் செலக்கூடியவை. 53 பெட்டிகளுடன் கத்துவாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல ரயிலில் கார்டு யாரும் பணியில் இல்லை என்பது பிரேக் வேன் இல்லாததும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது.
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, பணியில் இருக்கும் நிலைய அதிகாரி, சரக்கு ரயில் நிறுத்தப்பட்டதும் சாரதிகள் பிரேக்கை சரியான முறையில் செலுத்தியுள்ளனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
ஞாயிறுக்கிழமை காலையில் 5.20 மணியளவில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிலைய அதிகாரிக்கு ரயிலை ஜம்முவுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலைய அதிகாரி சாரதியிடம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். ஆனால் கார்டு யாரும் பணியில் இல்லாததால் ரயிலை ஜம்மு வரை இயக்க முடியாது என சாரதி கூறியுள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் ரயிலை நிறுத்திவிட்டு சாரதியை பணியில் இருந்து விடுவித்துள்ளனர்.
சாரதி ரயிலின் சாவியை காலை 6 மணியளவில் ஒப்படைத்துள்ளார். காலை 6 மணி முதல் 7.10 மணி வரை சரக்கு ரயில் சாரதிகள் யாருமின்றி தனியாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர், தாழ்வான பகுதி என்பதால் ரயில் தானாக ஓட ஆரம்பித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பிடிஐ கூறுகிறது.
வல்லுநர்களின் கூற்றுப்படி, ஆளில்லாமல் ஒரு ரயிலை நிறுத்த வேண்டும் எனில், சாரதியிடம் நிலைய அதிகாரி எழுத்துப்பூர்வமாக தகவல் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரிகிறது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 6 ரயில்வே அதிகாரிகளை இடைநீக்கம் செய்து ஃபிரோஸ்புர் கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிடிஐ செய்தி முகையிடம் பேசிய வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஷோபன் சவுத்ரி, இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.