நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயிற்சியாளருக்கு நேர்ந்த சோகம்!
பிரித்தானியாவில் நடுவானில் பறக்கும்போது பயிற்சியாளர் மாரடைப்பால் பலியான நிலையில் அவர் நகைச்சுவைக்காக விளையாடுகிறார் என விமானி நினைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வடக்கே லங்காஷைர் பகுதியில் 57 வயது மூத்த விமான பயிற்சியாளர் ஒருவரை அழைத்து கொண்டு பிளாக்பூல் விமான நிலைய பகுதியில் ஒரு ரவுண்டு வருவதற்காக விமானி ஒருவர் சென்றுள்ளார்.
ஒற்றை என்ஜின் கொண்ட பைப்பர் என்ற பி.ஏ.-28-161 எண் கொண்ட விமானம் ஓடுபாதையில் செல்லும்போது அவர்கள் இருவரும் நன்றாக பேசி கொண்டு இருந்துள்ளனர்.
விமானம் உயரே சென்றபோது, பயிற்சியாளரின் தலை திடீரென சரிந்துள்ளது. ஆனால், அவர் தூங்குவது போன்று நடிக்கிறார் என விமானி நினைத்துள்ளார்.
மூத்த பயிற்சியாளர் நலமுடன் இருக்கிறார் என விமானிக்கு தெரியும். அதனால் தவறாகவோ அல்லது தீவிர விவகாரமோ எதுவும் நடக்கவில்லை என்று நினைத்தபடி விமானத்தில் ஒரு சுற்று சுற்றி வந்துள்ளார்.
ஆனால் கடைசியாக பயிற்சியாளரின் தலை, விமானியின் தோளில் சாய்ந்துள்ளது. அப்போதும், நகைச்சுவைக்காக அவர் அப்படி செய்கிறார் என நினைத்தபடி, தொடர்ந்து பறந்து கொண்டு இருந்துள்ளார்.
விமானம் தரையிறங்கிய பின்னரும் பயிற்சியாளர் பதில் எதுவும் அளிக்காமல், எழுந்திருக்காத நிலையில், இருந்துள்ளார், அதை கண்டதும் அதிர்ச்சியடைந்த விமானி அவசரகால விமான பணியாளர் ஒருவரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இருப்பினும், அந்த பயிற்சியாளரை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு முன்பே உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது என்றும், அதற்காக மருந்து எடுத்து வந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அவரது பிரேத பரிசோதனை முடிவில், மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பான விவரங்கள், பிரித்தானிய நாட்டின் விமான விபத்துகள் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணை முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.