கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடும் ராஜதந்திர முரண்பாடு ஏற்படும் அபாயம்
கனடாவில் சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஒருவரின் படுகொலையின் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து பிரபல சீக்கிய தலைவர் ஹார்டீப் சிங் நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையுடன் இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தொடர்பு உண்டு என்பதற்கு நம்பகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் மிகவும் பாரதூரமான ஓர் விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென நிஜார் கோரி வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கனடாவிற்கான முக்கிய இந்திய ராஜதந்திரி நாடு கடத்தப்பட்டுள்ளார்.
கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த விடயத்தை நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
கனடா சட்டம் ஒழுங்கை மதிக்கும் நாடு எனவும் நாட்டு மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் நாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.