இரகசிய இடத்திற்கு தப்பிய ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தங்கள் வீட்டை விட்டு ரகசிய இடத்திற்கு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை இரத்து செய்ய வலியுறுத்தி சுமார் 50,000 லொறி சாரதிகள் தலைநகரில் குவிந்துள்ளதை அடுத்து, பாதுகாப்பு கருதி பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் சனிக்கிழமை மட்டும் நூற்றுக்கணக்கான லொறி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க எல்லையை கடக்க கொரோனா தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லொறி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பூசி மறுக்கும் லொறி சாரதிகள் மிகக் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களே என பிரதமர் ட்ரூடோ தெரிவித்திருந்த அடுத்த நாள், தலைநகருக்கு செல்லும் பாதை நெடுக 45 மைல்கள் தொலைவுக்கு தங்கள் லொறிகளை அணிவகுப்பில் ஈடுபடுத்தியுள்ளனர் சாரதிகள்.
லொறி சாரதிகளின் இந்த ஆர்ப்பாட்டமானது நாட்டு நலனுக்கு எதிரானது எனவும், அறிவியலுக்கு எதிரானது எனவும் சமூகத்திற்கு எதிரானது எனவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பிரதமர் ட்ரூடோ இரகசிய இடத்திற்கு செல்லவில்லை எனவும், அவர் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் வீட்டில் இருந்தே பணியாற்றுவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.