அமெரிக்கா விமான விபத்து தொடர்பில் ஒபாமா மற்றும் பைடன் குற்றச்சாட்டும் ட்ரம்ப்
அமெரிக்கா, வொஷிங்டனில் நடந்த விமான விபத்துக்கு ஒபாமா மற்றும் பைடன் தான் காரணம் என அமெரிக்க ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு இராணுவ ஹெலிகொப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்துக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பராக் ஒபாமாவே காரணம் என தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
விமான விபத்து குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று (30) செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ஒபாமாவும் பைடனும் மக்களின் பாதுகாப்புக்குப் பதிலாக இடதுசாரி பன்முகத்தன்மை கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தனர்.
அதனால், விமானப் போக்குவரத்துத் துறையில் இருந்த திறமையானவர்கள் வெளியேற்றப்பட்டனர். 2016 இல் நான் ஜனாதிபதியான போது, அறிவுத்திறன் மற்றும் உளவியல் ரீதியாக மேம்பட்டவர்களை மட்டுமே விமான கட்டுப்பாட்டாளர்களாக தேர்ந்தெடுக்க அனுமதித்தேன்.
ஆனால் 2020 இல் ஜோ பைடன் ஜனாதிபதியான பிறகு விமானத் துறையை முன்பைவிட தரம் குறைந்ததாக மாற்றினார்.
இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் மேலும், விபத்தில் உயிரிழிந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்