ஈரானை மீண்டும் எச்சரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை மீண்டும் எச்சரித்துள்ளார்.
ஈரானில் அமைதியான போராட்டக்காரர்கள் மேலும் கொல்லப்பட்டால் அமெரிக்கா கடுமையாக பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு உயர்விற்கு எதிராக ஈரானில் போராட்டங்கள் உயிரிழப்புகளாக மாறியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பல நகரங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், கலவரம் தீவிரமடைந்ததற்குப் பின்னர் முதன்முறையாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்ந்து வரும் விலைவாசி, பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பு சிக்கல்களுக்கு எதிராக, தலைநகர் தெஹ்ரானில் கடை உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
“ஈரான் அமைதியான போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றால் – அது அவர்களின் வழக்கம் – அமெரிக்கா அவர்களை காப்பாற்றத் தயார்.
நாங்கள் முழுமையாக தயார் நிலையில் இருக்கிறோம்,”என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.