கனடாவுடனான அனைத்து வர்த்தக் பேச்சுவார்த்தைகளும் ரத்து: ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது விதித்துள்ள வரிகளால் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், வரிவிதிப்பு தொடர்பில் கனடா வெளியிட்ட வீடியோ ஒன்று ட்ரம்பை ஆத்திரமடையவைத்துள்ளது.
கனடாவின் ஒன்ராறியோ மாகாண அரசு சமீபத்தில் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.

அந்த வீடியோவில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ரொனால்ட் ரீகன், வரிவிதிப்பு தொடர்பில் வானொலியில் ஆற்றிய உரை ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த உரையில், ’வெளிநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதிப்போம் என ஒருவர் கூறுவாரானால், பார்ப்பதற்கு அது நாம் அமெரிக்காவின் தயாரிப்புகளையும் வேலைகளையும் பாதுகாப்பதற்காக எடுக்கும் நடவடிக்கை போல் தோன்றும்.
ஆனால், காலப்போக்கில் அது ஒவ்வொரு அமெரிக்க பணியாளரையும் நுகர்வோரையும் பாதிக்கும். அதிக வரிகள் விதித்தல், மற்ற நாடுகள் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யும். அதனால், வர்த்தகப்போர்கள் உருவாகலாம்’ என்று கூறியுள்ளார் ரீகன்.
ஆனால், அந்த வீடியோ ட்ரம்பை ஆத்திரமடையச் செய்துள்ளது. அந்த வீடியோ குறித்து ரீகன் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அதில் கனடா போலியான ஒரு வீடியோவை மோசடியாக பயன்படுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகப் பக்கத்தில் இந்த விடயம் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், அது அமெரிக்க நீதிமன்றங்களின் முடிவுகளில் தலையிடுவதற்காக கனடா வெளியிட்டுள்ள விளம்பரம் என்றும், வரிகள் தேசிய பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் மிக முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கனடாவின் அந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், அதன் மோசமான நடத்தை காரணமாகவும், கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.