மத்திய கிழக்கில் பதற்றம் தணிக்க முயற்சி ; ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம் நீடிப்பு
ஈரான் நாட்டின் எரிசக்தி உலைகள் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் காலக்கெடுவை மேலும் 10 நாட்களுக்கு நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அறிக்கையில்,
ஈரான் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, தாக்குதல்கள் நிறுத்தி வைக்கப்படும் காலம் எதிர் வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8 மணி வரை (அமெரிக்க கிழக்கு நேரம்) நீடிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமான முறையில் முன்னேற்றமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் குறித்து ஊடகங்களில் வெளியாகும் எதிர்மறையான செய்திகளைச் சாடியுள்ள அவர், "போலிச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் கூற்றுகளுக்கு மாறாக, பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், தூதரக ரீதியிலான தீர்வுகளைக் காணவும் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனினும், ஈரானியத் தரப்பிலிருந்து இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.