தொலைக்காட்சி, வானொலி நிறுவனங்களுக்கு மானியத்தை குறைத்த ட்ரம்ப்
அமெரிக்காவில் உள்ள என்பிஆர் எனப்படும் பொது வானொலி அமைப்பு மற்றும் பிபிஎஸ் எனப்படும் பொது தொலைக்காட்சி சேவை நிறுவனங்களுக்கு பெடரல் அரசால் வழங்கப்படும் மானியத்தை குறைப்பதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபரான டிரம்ப், கடந்த ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
உத்தரவில் கையெழுத்து
அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என அதிரடி உத்தரவுகளை அறிவித்துள்ளார்.
தனது நண்பரும் அரசு நிர்வாக திறன் சேவை தலைவர் எலான் மஸ்க்கின் பரிந்துரையை ஏற்று பல ஊழியர்களை பதவியிலிருந்து நீக்கினார் டிரம்ப்.
இப்படி தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வரும் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பொது வானொலி அமைப்பு(என்பிஆர்) மற்றும் பொது தொலைக்காட்சி அமைப்பு(பிபிஎஸ்) ஆகியவற்றுக்கான மானியங்களை குறைப்பதற்கான உத்தரவில் தற்போது கையெழுத்திட்டுள்ளார்.
ஒளிபரப்பாளர்களின் செய்திகளில் சார்பு இருப்பதாக டிரம்பும் அவரது குடியரசு கட்சிக்காரர்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
பொது ஊடகங்களுக்கான நிதியை குறைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சி அமெரிக்க மக்களுக்கு பிபிஎஸ் மற்றும் உள்ளூர் உறுப்பினர் நிலையங்கள் வழங்கும் அத்தியாவசிய சேவையை சீர்குலைக்கும் என்று பிபிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.