ட்ரம்ப் உடல்நலம் குறித்து மீண்டும் பரபரப்பு ; வைரலான பேட்டி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உடல்நலம் மற்றும் ஆற்றல் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு 'தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்' (The Wall Street Journal) இதழுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.
தனது உடல்நலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ட்ரம்ப், கடந்த ஒக்டோபர் மாதம் தான் மேற்கொண்டது எம்.ஆர்.ஐ ஸ்கேன் அல்ல, மாறாக அது ஒரு சிடி ஸ்கேன் என்று வெளிப்படுத்தியுள்ளார்.

தேசிய இராணுவ மருத்துவ மையத்திற்குச் சென்றபோது, இதயம் மற்றும் வயிற்றுப் பகுதியில் மருத்துவ சோதனைகளை மேற்கொண்டதற்காகத் தான் தற்போது வருத்தப்படுவதாக ட்ரம்ப் கூறினார். "நான் அந்தச் சோதனையைச் செய்துகொண்டது எதிர்ப்பாளர்களுக்கு ஒரு ஆயுதமாகப் போய்விட்டது.
எனக்கு ஏதோ உடல்நலக் குறைவு என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
அவரது மருத்துவர் ஷான் பார்பபெல்லா கூறுகையில், ட்ரம்ப்பின் இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவே இந்தச் சோதனைகள் பரிந்துரைக்கப்பட்டன என்றும், அதன் முடிவுகள் மிகவும் சாதகமாக வந்தன என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெள்ளை மாளிகையில் இடம்பெறும் கூட்டங்களின் போது அவர் தூங்குவதாக எழுந்த முறைப்பாடுகளை ட்ரம்ப் மறுத்துள்ளார். "நான் தூங்கவில்லை, வெறும் கண்களை இமைத்தேன் அல்லது கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன்.
நான் இமைக்கும்போது யாராவது புகைப்படம் எடுத்து நான் தூங்குவதாகக் கூறுகிறார்கள்" என்று அவர் விளக்கம் அளித்தார். தனது கேட்கும் திறன் சிறப்பாக இருப்பதாகவும், தனது சுறுசுறுப்பிற்குத் தனது மரபணுக்களே காரணம் என்றும் அவர் அந்தப் பேட்டியில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.