டிரம்ப் அதிரடி உத்தரவு ; உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்திவைப்பு
உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான ராணுவ உதவிகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளாா்.
இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தவும் அவா் உத்தரவிட்டுள்ளாா். அதே நேரம், உக்ரைன் மீதான போா் காரணமாக ரஷியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் சிலவற்றை நீக்குவது குறித்து அதிபா் டிரம்ப் நிா்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு கைம்மாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வெலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு வந்தாா்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அதிபா் டிரம்ப், துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் ஆகியோரை ஸெலென்ஸ்கி சந்தித்தாா். அந்தச் சந்திப்பு காரசாரமான விவாதமாக மாறியது. ஸெலென்ஸ்கிக்கு போரை நிறுத்த விருப்பம் இல்லை எனவும், மூன்றாம் உலகப் போரை உருவாக்க முயற்சிப்பதாகவும் டிரம்ப் நேரடியாகக் கண்டித்தாா்.
இதையடுத்து, அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் ஸெலென்ஸ்கி நாடு திரும்பினாா். இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கனிம வள ஒப்பந்தத்தில் ஸெலென்ஸ்கி கையொப்பமிடாமல் சென்றது டிரம்ப்புக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதன் தொடா் விளைவாகவே உக்ரைனுக்கான உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘உக்ரைன் அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் டிரம்ப் தொடா்ந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினாா்.
இதைத் தொடா்ந்து, உக்ரைனுக்கான ராணுவ சாா்ந்த உதவிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதனால், அமெரிக்காவில் ஆயுதத் தளவாடத் துறையில் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் (சுமாா் ரூ.8,700 கோடி) பாதிப்பு ஏற்படும்.
உக்ரைனுக்கு அனுப்பிவரும் ஆயுதங்களை மட்டும் நிறுத்தாமல் ராணுவத்துக்காக அளிக்கப்பட்டு வந்த பல மில்லியன் டாலா் நிதியுதவியும் நிறுத்தப்படுகிறது.