கனடா, கிரீன்லாந்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் டிரம்ப் கிண்டல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா மற்றும் கிரீன்லாந்தை குறிவைத்து சமூக வலைதளங்களில் கேலி செய்யும் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் ஒரு மாற்றியமைக்கப்பட்ட நாடுகளின் வரைபடத்தை பதிவிட்டார். அந்தப் புகைப்படத்தில், கனடா மற்றும் கிரீன்லாந்து உட்பட வட அமெரிக்காவின் வரைபடத்தின் மீது அமெரிக்க தேசியக் கொடி போர்த்தப்பட்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.
ஓவல் அலுவலகத்தில் இருந்து டிரம்ப் அந்த வரைபடத்தை காட்சிப்படுத்தும் நிலையில், ஐரோப்பிய தலைவர்கள் அதைப் பார்ப்பது போல அந்த படம் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை
டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல், தேசிய பாதுகாப்பை காரணமாகக் கூறி, டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தையும் இணைத்துக்கொள்ள தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கனடா, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்றும் நாட்டு பாதுகாப்பு அமைப்பான நேட்டோ (NATO) கூட்டணியில் உள்ள நாடுகளாகும்.
எனினும், டிரம்பின் விரிவாக்க நோக்கங்களுக்கு எதிராக கனடாவும் டென்மார்க்கும் தெளிவாக மறுப்பு தெரிவித்துள்ளன. இந்த மாற்றியமைக்கப்பட்ட புகைப்படத்தின் அசல் வடிவம் 2025 ஆகஸ்ட் 18 அன்று வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்டது.
அந்த அசல் படத்தில், உக்ரைன் வரைபடத்தை மையமாகக் கொண்டு, டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், ஜெர்மன் சான்சலர் ஃப்ரிட்ரிக் மெர்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மாக்ரோன், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.