டிரம்ப் அதிரடி அறிவிப்பு ; உலக நாடுகள் மீதான வரி 15% ஆக உயர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளிலிருந்து நாட்டுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்படும் சுங்க வரியை 15% ஆக உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவரது முந்தைய விரிவான சுங்க வரி கொள்கையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய மறு நாளே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றம், தேசிய பொருளாதார அவசரநிலைச் சட்டத்தின் கீழ் சுங்க வரி விதித்ததில் ஜனாதிபதி அதிகார வரம்பை மீறியுள்ளதாகத் தீர்ப்பளித்தது.

இறக்குமதி வரிகளை விதிக்க காங்கிரஸ் அனுமதி அவசியம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுளள்து.
முன்னதாக, நீதிமன்றம் ரத்து செய்த வரிகளுக்கு பதிலீடாக, 10% உலகளாவிய சுங்க வரி விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
எனினும், சனிக்கிழமை தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசலில் வெளியிட்ட பதிவில், அந்த வரி விகிதம் உடனடியாக 15% ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
அமெரிக்காவுக்கு எதிரானதாக உள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில், உலகளாவிய சுங்க வரியை உடனடியாக 15% ஆக உயர்த்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த சில மாதங்களில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படும் புதிய சுங்க வரிகளை டிரம்ப் நிர்வாகம் தீர்மானித்து அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட தீர்ப்பை “மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்று” என விமர்சித்த டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றும்” தனது கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.