பொய்த்துப் போகும் ட்ரம்பின் முயற்சிகள் ; உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல்
உக்ரைனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுரங்கத் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நான்கு ஆண்டுகளை எட்டிவிட்டியுள்ள நிலையில், இந்தப் போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், ரஷ்யா தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

முத்தரப்பு பேச்சுவார்த்தை
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த நிலையில், ரஷ்யா, உக்ரைன் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனிடையே, பெப்ரவரி 4 மற்றும் 5ம் திகதிகளில் அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டினிப்ரோ பகுதியில் சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற பஸ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில், பஸ்ஸில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு 15 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.