பிரிட்டனில் டிரம்ப் பயணித்த ஹெலிகாப்டரில் கோளாறு; அவசரமாக தரையிறக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, டிரம்ப் பயணித்த அதிநவீன ஹெலிகாப்டர் ‘மெரைன் ஒன்’ திடீரென ஒரு பண்ணை நிலத்தில் அவசரமாக தரையிறங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டிரம்பின் இந்தப் பயணம் பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மருடன் சந்திப்பு, மற்றும் அரச குடும்பத்துடன் கலந்துரையாடல் எனப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டிருந்தது.
டிரம்ப் நகைச்சுவை
இந்தச் சந்திப்புகள் முடிந்து, டிரம்ப் தனது ஹெலிகாப்டரில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கரோலின் லீவிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஹெலிகாப்டரில் ஒரு சிறு ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, விமானிகள் உடனடியாக அருகில் உள்ள ஒரு திறந்தவெளியில் தரையிறங்க முடிவு செய்தனர்.
டிரம்பும் , அவரது மனைவியும் பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர், மற்றொரு துணை ஹெலிகாப்டருக்கு மாற்றப்பட்டு, அவர்களது பயணம் தொடர்ந்தது. இதனால், அதிபர் விமான நிலையம் செல்வதில் சுமார் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.
பின்னர், ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், “பாதுகாப்பாகப் பறங்கள் என்று நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா? ஏனென்றால் நான் இந்த விமானத்தில் இருக்கிறேன்! நான் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்!” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
அவரது வார்த்தைகளில் இருந்த பதற்றமும், பாதுகாப்பைக் குறித்த அக்கறையும் தெளிவாகத் தெரிந்தது. இந்தக் கோளாறு சிறியதாகக் கருதப்பட்டாலும், இது உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.