ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் ; மிரட்டும் ட்ரம்ப்
ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதற்கிடையே ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச அமைதி திட்ட முன்மொழிவு ஒன்றை ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமைதி திட்டம்
இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுகொடுக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. டிரம்ப்பின் இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.
இதனால் இத்திட்டத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மறுத்து வருகிறார். இதற்கிடையே அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி புதின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:- அமைதிதிட்டத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நிராகரித்தால் அவர் தனது சிறிய இதயத்துடன்தான் போராட வேண்டியதிருக்கும். ஆனால் இந்த திட்டம் பேச்சுவார்த்தைக்கு திறந்தே உள்ளது.
இந்த அமைதிதிட்ட வரைவு இறுதி சலுகை அல்ல. நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம். 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் நடந்திருக்காது என்றார். முன்னதாக போர் நிறுத்த வரைவு திட்டத்தை வருகிற 27-ந் தேதிக்குள் உக்ரைன் ஏற்க வேண்டும்.
இல்லையென்றால் அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதற்கிடையே இந்த அமைதி வரைவு திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
இந்த நிலையில் இன்று இத்திட்டம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகளின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.