ஆயுதக் கையிருப்பு குறைவதாக வரும் செய்திகள் குறித்து டிரம்பின் பதில்
அமெரிக்க ராணுவத்தின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக வெளியான ஊடகச் செய்திகளையும் சுயேச்சை ஆய்வுகளையும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக மறுத்துள்ளார்.
மேலும், இத்தகைய அறிக்கைகள் "தேசத்துரோகமானவை" என்றும் அவர் சாடியுள்ளார்.
அல் ஜசீரா மற்றும் பல அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்கா தனது சக்திவாய்ந்த ஆயுதங்களான டோமாஹாக், பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் தாட் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் கையிருப்பில் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன.
தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இந்த அறிக்கைகள் "100% தவறானவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவத்திடம் நடுத்தர மற்றும் உயர்தர வெடிமருந்துகளின் கையிருப்பு "வரம்பற்ற அளவில்" உள்ளதாகவும், நாட்டின் ஆயுத உற்பத்தியை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கப் போரின் காரணமாக, சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான ஆயுத விநியோகம் சில மாதங்கள் தாமதமான நிலையில், அந்த நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.