ஹோர்முஸ் நீரிணைக்கு ட்ரம்பின் பெயர்? சர்ச்சையை கிளப்பும் அமெரிக்க ஜனாதிபதி
ஈரானுடனான போருக்கு மத்தியில் முக்கிய நீர்வழிப்பாதை சர்ச்சைக்குரியதாக நீடித்து வரும்போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணைக்கு 'டிரம்ப் நீரிணை' எனப் பெயர் மாற்றுமாறு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹோர்முஸ் நீரிணையின் பெயரை ட்ரம்ப் நீரிணை என்று மாற்றிவிடலாமா? அமெரிக்காவை போலவே, அதுவும் முன்னெப்போதையும் விட 'சூடாக' இருக்கும்!" என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவுடனான வர்த்தக போருக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியை 'அமெரிக்கா ஏரி' எனப் பெயர் மாற்றுமாறு ட்ரம்ப் உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் முன்மொழிந்த சமீபத்திய புவியியல் பெயர் மாற்றம் இதுவாகும்.
மேலும், 2025 ஜனவரியில் மீண்டும் பதவியேற்ற தனது முதல் நாளிலேயே, டிரம்ப் மெக்சிகோ வளைகுடாவிற்கு "அமெரிக்கா வளைகுடா" என பெயர் மாற்றினார்.
முந்தைய பல பெயர் மாற்றங்கள், 80 வயதான அமெரிக்க அதிபரின் மேலோட்டமான கேளிக்கையான பேச்சுகளாக தொடங்கி, பின்னர் அவரே அவற்றை நிஜமாக்கி காட்டின.
ட்ரம்ப் சமீப வாரங்களில் ஹார்முஸ் நீரிணையின் மீது இறையாண்மையை கோருவதாக மீண்டும் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன், அந்த நீர்வழியை ஒரு "புதிய அமெரிக்க பிரதேசம்" என காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளார்.