பத்திரிகை மீது 10 பில்லியன் டாலர் கேட்டு டிரம்ப் வழக்கு
அமெரிக்காவை உலுக்கிய பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் அதிபர் டிரம்பின் பெயர் இருப்பதாக அண்மையில் எலான் மஸ்க் புயலை கிளப்பியிருந்தார்.
இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் எப்ஸ்டீனுக்கு டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக, கடிதம் ஒன்றை முன்னணி அமெரிக்க நாளிதழான 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல், 2003-ல் எப்ஸ்டீன் பிறந்தநாளுக்காக, பலரிடம் இருந்து வாழ்த்து கடிதங்களைப் பெற்று ஆல்பம் ஒன்றை தயாரித்திருந்தார்.
அதில் டிரம்ப்பின் கடிதமும் இடம்பெற்றுள்ளது. ஒரு பெண்ணின் நிர்வாண அவுட்லைன் வரையப்பட்ட பேப்பரில் டிரம்ப் வாழ்த்து கடிதத்தை டைப் செய்துள்ளார்.
இந்தக் கடிதத்தில் அவரது கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் டிரம்ப் இதை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எப்ஸ்டீனுக்கு நான் எழுதியது போல, போலி கடிதத்தை அச்சிட்டுள்ளது. அது என்னுடைய வார்த்தைகள் அல்ல. நான் அப்படி பேசவும் மாட்டேன். நான் வரைந்ததே கிடையாது. நான் ரூபர்ட் முர்டோக்கிடம் இப்படி போலி கதைகளை அச்சிடக் கூடாது என்று கூறினேன்.
ஆனால், அவர் அதை செய்துள்ளார். அவர் மீதும், மூன்றாம் தர செய்தித்தாள் மீதும் வழக்கு தொடர போகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது 10 பில்லியன் மானநஷ்டஈடு கேட்டு டொனால்டு டிரம்ப் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.