ஒப்பந்தம் செய்யாவிட்டால் மோசமான விளைவுகள் உண்டு ; ட்ரம்பின் எச்சரிக்கையால் அதிரும் ஈரான்
ஒப்பந்தம் செய்யவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் - தெஹ்ரான் இடையேயான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தைகள்
அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கியின் உதவியுடன் அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலைத் தடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் ஒப்பந்தங்களுக்கு ஒத்துபோகாத ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வாஷிங்டனில் தனது அமைதி வாரியத்தின் தொடக்கக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் செய்வது எளிதான காரியம் அல்ல என்பது அனைவரும் தெரியும். நாம் நல்ல ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவிவரும் சூழலில், ஓமன் வளைகுடாவில் ரஷியாவுடன் சேர்ந்து ஈரான் கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
அரபிக்கடலில் தனது போர்க் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ள அமெரிக்கா, அதிநவீன போர் விமானங்களையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி உள்ளதால் பதற்றம் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளதால், உலக நாடுகளிடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.