கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் ; இந்தியாவை எச்சரிக்கும் ட்ரம்ப்
நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படாவிடின் இந்தியா மீது 20% முதல் 25% வரை வரி விதிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் அமெரிக்க வரிகள் அமுலாகவுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதுடன், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
மேலதிக பேச்சுவார்த்தைகள்
இந்தநிலையில், இரு தரப்பினரும் வேறுபாடுகளைத் தீர்ப்பதில் ஆர்வமாக இருந்தாலும், மேலதிக பேச்சுவார்த்தைகள் தேவை என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரேர் கூறினார்.
அதன்படி, முறையான வரி அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லையாயின் இந்தியா விரைவில் கடுமையான வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இந்தியாவிலிருந்து 87.4 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்துள்ள அதேநேரம் 41.8 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
இதன் விளைவாக 45.7 பில்லியன் டொலர் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.