பின் வாங்கும் ட்ரம்ப் ; சீனா மீதான 100 சதவீத வரி விதிப்பை கைவிட தீர்மானம்
தென் கொரியாவில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேச்சு நடத்த உள்ள நிலையில், சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சீனா அறிவித்துள்ள அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கான புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்பில் அறிவித்ததையடுத்து அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்கா தன்னிச்சையான இரட்டை நிலைபாட்டை கடைப்பிடிக்கிறது. நாங்கள் போராட பயப்படவில்லை. எதிர் நடவடிக்கை எடுப்போம் என 100 சதவீத வரி அறிவித்த அமெரிக்கா முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் 1ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா செல்லும் ட்ரம்ப் அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த உள்ளார். இந்த சூழலில், சீனாவுக்கு 100 சதவீத வரி விதிப்பை கைவிடுவதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இது குறித்து, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியதாவது: சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்ற டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல் நீங்கி விட்டது. சீன துணை பிரதமர் உடன் நாங்கள் இரண்டு நாள் சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்தினோம்.
சீனாவுடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.